Indian Communist Party’s Tamilnadu state committee meeting was held yesterday. The central committee member of the party, TK Rangarajan, led the meeting yesterday. The state secretary G Ramakrishnan and central committee members U. Vasuki, P. Sampath attended the meeting. Resolutions have been made at the meeting. Here are those resolutions made by the party.
“அதிகாரப்போட்டியில் அதிமுக - ஆதாயம் தேட முயலும் பாஜக - அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீதும் தொடுக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில், 20 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் முதல் குற்றவாளியான ஜெயலலிதா உட்பட 4 பேர் மீதுமான குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளது. ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் தவிர, மீதி 3 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தனிநபர்கள் மீதான கண்டனம் அல்ல, அதிமுக மீதான கண்டனமே. எனவே வழக்கில் பட்டியலிடப்பட்டுள்ள ஊழல் சொத்துக்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
எங்கும் வியாபித்திருக்கும் ஊழல்:
நவீன தாராளமய கொள்கைகளின் நடைமுறையாக்கத்தில் ஆளும் அரசியல்வாதிகள்-அதிகார வர்க்கம்-கார்ப்பரேட்டுகளின் கொள்ளை கூட்டணி உருவாகி, அனைத்தையும் ஊழல்மயமாக்கியிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்திருக்கிறது.
முதலாளித்துவ கட்சிகளின் உயர்மட்டத்தில் உள்ள பலர் ஊழல் கறை படிந்தவர்களாகவே இருக்கின்றனர். திமுக தலைமையின் மீதான ஸ்பெக்ட்ரம் வழக்கு அவர்களின் தலை மேல் தொங்கும் கத்தியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சகாயம் அவர்கள் நீதிமன்றத்துக்கு அளித்த கிரானைட் ஊழல் பற்றிய அறிக்கைக்கு, அதிமுக அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை. திமுக, அதிமுக இரண்டின் ஆட்சியின் போதும் ஊழல் நடந்தது அவரது பூர்வாங்க அறிக்கையிலேயே அம்பலப்பட்டிருக்கிறது. தாதுமணல் கொள்ளை மீதான ககன் தீப்சிங் பேடி அவர்களின் அறிக்கை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
மணல் கொள்ளை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. சத்துணவு சமையலர் பணி முதல் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி வரை, ரேட் வைத்து விற்கப்படுவது நாடறிந்த உண்மை. மூச்சடைக்கும் அளவுக்கு ஊழல் யாதுமாகி வியாபித்து, நிறுவனமயமாகி நிற்கும் அவல நிலை நிலவுகிறது. மாநில உயர்மட்ட ஊழலைக் கட்டுப்படுத்த லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும் என்பது மிக அவசரம். அதே சமயம், இந்தக் காட்சி மாற வேண்டும் எனில், ஆட்சியும், நபர்களும் மாறினால் போதாது, கொள்கை மாற வேண்டும், அரசியலின் மையமாக மக்கள் நலன் அமைந்திட வேண்டும். மேலும் விகிதாச்சார பிரதிநிதித்துவம், திரும்ப அழைக்கும் உரிமை, தேர்தல் செலவுகளை அரசே ஏற்பது, கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியளிப்பதை தடை செய்வது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களும் ஊழலை கட்டுப்படுத்த இன்றியமையாத நடவடிக்கைகளாகும்.
ஊழலுக்கு அப்பாற்பட்டதா பாஜக?
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவிற்குள் நடக்கும் அதிகாரப் போட்டியை மத்திய அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியாக, முக்கிய தென் மாநிலமான தமிழகத்தில் கால் ஊன்ற பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. தமிழகத்தின் பாரம்பரியமான சமூக நீதி, மதச்சார்பின்மையைப் பின்னுக்குத் தள்ளி, மதவெறி அரசியலை முன்னுக்கு நிறுத்தும் இதன் அபாயம் குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. ஜெயலலிதாவின் வழக்கில் அவருக்காக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வாதாடியது கர்நாடக வழக்கறிஞர் ஆச்சார்யாவிற்கு நெருக்கடி கொடுத்தது உள்ளிட்டு குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சிகளை பாஜக எடுத்தது. ஆனால் ஊழலுக்கு எதிராக தாங்கள் போர் தொடுத்திருப்பது போல வெளிவேசம் போடுகிறது. அதே போல் பாஜக ஆளும் மாநிலங்களில், மத்திய பிரதேச வியாபம் ஊழல் உட்பட, பரவலாக ஊழல் நடப்பது கண்கூடு. மத்திய மோடி அரசு, தமிழக நலனைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, உதய் திட்டம் திணிப்பு, வறட்சி நிவாரணத்துக்குக் கைவிரிப்பு என்று பட்டியலே போட முடியும். இவையெல்லாம் தான், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைத்து மையங்களிலும் மோடியின் மீதான கடும் விமர்சனங்கள் முழக்கங்களாக வெளிப்படுவதற்கு இட்டுச் சென்றது.
ஆளுநர் நடவடிக்கை விமர்சனத்துக்குரியது:
இச்சூழலில், அரசியல் சட்ட நடைமுறைப்படி ஆளுநர் நடந்திருக்க வேண்டும். சட்டமன்றத்தைக் கூட்டி வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வழிவகை செய்திருக்க வேண்டும். இதில் இன்னும் காலம் தாழ்த்துவது சந்தேகங்களை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை மத்திய பாஜக அரசு, தம் அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. அருணாச்சாலப் பிரதேசத்திலும், உத்தராகாண்டிலும் ஆளுநர்களின் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. டில்லியிலும், பாண்டிச்சேரியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுகளுக்கு எதிராக பாஜக நியமித்த ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் காங்கிரசும் இதே அணுகுமுறையைப் பின்பற்றியது. தற்போது, தமிழகத்திலும் அவ்வாறே காய் நகர்த்தப்படுகிறது.
எவ்வித காலதாமதமுமின்றி அரசியல் சட்டத்தின் அடிப்படையில் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மை யாருக்கு என்பதை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
தீர்மானம் 2:
மக்கள் நலன் காக்க களம் இறங்குவோம்:
தமிழகத்தைத் தத்தளிக்க வைக்கும் பிரச்னைகளாக வறட்சி, விவசாயிகளின் கொத்து கொத்தான மரணங்கள், பெண்கள் குழந்தைகள் மீது அதிகரிக்கும் குரூரமான வன்முறை, தொடரும் சாதி ஆணவ கொலைகள் போன்றவை நம்மைக் கவ்விப் பிடித்துள்ளன. குடிநீர் தட்டுப்பாடு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒரு முறையே நல்ல தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. ஊரக வேலை திட்டத்தில் வேலை கிடைப்பது குறைந்து வருவதுடன், 5 மாதங்களாகக் கூலி பாக்கி நிற்கிறது. பொது விநியோக முறை பலவீனமடைந்துள்ளது. நீட் தேர்வு, தமிழக மாணவர்களின் நலனை பாதிக்கிறது. தகுதிக்கேற்ற வேலை என்பது நாளுக்கு நாள் கனவாகிக் கொண்டே வருகிறது. சிறு குறு தொழில்கள் தவித்து நிற்கின்றன. ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலில் இவை எதுவும் இடம் பெறுவதில்லை. தமிழக அரசியலில் நடக்கும் போட்டி அதிகார பங்கீட்டுக்கும், கட்சியின் சொத்துக்களுக்குமான போட்டி. ஊழல் சாம்ராஜ்யத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் நடவடிக்கை. மக்கள் பிரச்னைகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. சசிகலாவோ, பன்னீர் செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ இவர்கள் அனைவரும், கடந்த காலத்தில் நடந்துள்ள பல ஊழல்களில் பங்குதாரர்களாகவும், பலன் பெறுபவர்களாகவும் இருந்துள்ளனர்.
மக்கள் நலனுக்கே முன்னுரிமை
இப்பின்னணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக மக்களின் நலன் காக்க களம் இறங்குகிறது. பிப்ரவரி 7ம் தேதி மறியலைத் தொடர்ந்து, குடிநீர், ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை, ஆதார் அட்டை இணைப்பு என்ற பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்டுகளுக்குப் பொருட்கள் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, வட்டார அளவில் மக்களைத் திரட்டி போராட திட்டமிட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 20-25 தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பொது கூட்டங்கள், தெருமுனை கூட்டங்களை நடத்தி அதிகார போட்டிகள், பதவி போட்டிகள், ஊழல், பண பலம், சாதி மத அடையாளங்களை சுற்றியே வட்டமிடும் அரசியலைப் புறக்கணித்து, மக்கள் நலனுக்கான, கொள்கை அடிப்படையிலான, மாற்று அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்திட முடிவு செய்திருக்கிறது.
போராடினால் மட்டுமே உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. போராடினால் மட்டுமே திண்டாட்டங்கள் தீர்கின்றன. நமது வாழ்வுரிமைக்கான இந்த அறைகூவலை ஏற்று அணி திரள வேண்டும் எனத் தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.”
ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
16.02.2017
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST ARTICLES